COVID-19 தோற்றம் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துமாறு அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று, முதன்முறையாக சீனாவின் வூஹானில், 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் தோன்றியது. படிப்படியாக உலகம் முழுவதும் பரவிய இந்த பெருந்தொற்றின் காரணமாக கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தநிலையில், பேரிடர் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றில் இருந்து இன்னும் முழுமையாக மக்கள் மீண்டுவராத நிலையில், சீனா தான் கொரோனா வைரஸ் பரப்பியதாக பலநாடுகளும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன.
2021ம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய உளவு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், சீனாவின் வூஹானில் உள்ள பரிசோதனை மையத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவல் துவங்கியிருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், எப்படி பரவல் துவங்கியது என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் அமெரிக்கா ஆய்வில், சீனாவின் வூஹானில் உள்ள பரிசோதனை மையத்தில் நடந்த சிறிய விபத்து காரணமாகவே, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதாகவும் தெரிவித்திருந்தது. இதற்கு சீனா தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், COVID-19 தோற்றம் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துமாறு அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், இதுகுறித்தான தகவல்களை உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச அறிவியல் சமூகத்திடம் பகிர்ந்து கொள்வது அவசியம் ஆகிறது எனறும் நாம் பழி போடும் விசயங்களை விட்டு, விட்டு இந்த பெருந்தொற்று எப்படி தொடங்கியது என்பது பற்றிய நமது புரிதலில் முன்னேற்றம் அடைய வேண்டும். அதனால், வருங்காலத்தில் ஏற்பட கூடிய இதுபோன்ற நோய் தொற்றுகள் மற்றும் பெருந்தொற்றுகளை தடுக்க முடிவதுடன், நாம் அதற்கு தயாராகவும், அவற்றை எதிர்கொள்ளவும் முடியும் என கூறியுள்ளார்.
கொரோனா வைரசானது எப்படி வந்தது? மற்றும் மனிதர்களிடையே எப்படி பரவ தொடங்கியது? என்பது பற்றிய அறியப்படாத விசயங்களை அறிந்து கொள்வது, வருங்கால பெருந்தொற்றுகளை தவிர்ப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார். சமீபத்தில் சீனாவின் உயரதிகாரிக்கு கடிதம் ஒன்றின் வழியே, ஒத்துழைப்பு வழங்க கேட்டு கொண்டுள்ளேன். ஏனெனில், பெருந்தொற்று எப்படி தொடங்கியது? என்பது பற்றிய தகவலில் வெளிப்படை தன்மை மற்றும் ஒத்துழைப்பு தேவையாக உள்ளது என கேட்டு கொண்டேன் என்று கூறினார். சீன தலைவர்கள் பலரிடம் இதுபற்றி எழுத்து வழியேயும், பேசியும் உள்ளேன் என அவர் கூறியுள்ளார். கொரோனா பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து கேட்டு கொள்கிறோம். தேவையான விசாரணைகளையும் அவர்கள் மேற்கொண்டு, அதற்கான முடிவுகளை பகிர வேண்டும் என டெட்ராஸ் கூறியுள்ளார்.