ஓட்டுநர் உரிமம் வாங்காத நபர்களுக்கு ஒரு நல்ல செய்தி. நீங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்லாமல் ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம். ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி RTO அலுவலகத்திற்கு சென்று கட்டாய ஓட்டுநர் சோதனைக்கு உட்படுத்தத் தேவையில்லை, ஆனால் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் இருந்து அதைப் பெறலாம்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய விதிகளின்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்க முடியும். மத்திய அல்லது மாநில போக்குவரத்து துறைகள் இத்தகைய பயிற்சி மையங்களை இயக்கும். ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் இந்த ஓட்டுநர் பயிற்சி மையங்களில் ஏதேனும் ஒன்றில் பயிற்சிக்காக பதிவு செய்து, அவர்கள் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன், பயிற்சி மையம் சான்றிதழ் வழங்கும். சான்றிதழைப் பெற்ற பிறகு, விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்டிஓவில் எந்த சோதனையும் இல்லாமல் பயிற்சி சான்றிதழின் அடிப்படையில் உரிமம் வழங்கப்படும்.
பயிற்சி மையங்களில் சிமுலேட்டர்கள் மற்றும் பிரத்யேக டிரைவிங் டெஸ்ட் டிராக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். பயிற்சி மையங்களில் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு ஆர்டிஓவை சோதனைக்கு வராமலேயே உரிமம் வழங்கப்படும். அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்கள் இலகுரக மோட்டார் வாகனங்கள் மற்றும் நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் (HMVs) ஆகியவற்றுக்கான பயிற்சியை வழங்க முடியும். LMV(Light Motor Vehicle) களுக்கான பயிற்சியின் மொத்த கால அளவு 29 மணிநேரமாக இருக்கும், இது பாடத்திட்டத்தின் தொடக்கத்திலிருந்து நான்கு வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். பயிற்சி மையங்கள் தத்துவார்த்த மற்றும் நடைமுறை அறிவை வழங்கும்.

இந்த மையங்கள் தொழில் சார்ந்த சிறப்புப் பயிற்சிகளை வழங்கவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பயிற்சி மையங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. இருப்பினும், ஒரு சில மாநிலங்கள் ஓட்டுநர் பயிற்சி மையங்களைத் திறப்பது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளன, இது ஓட்டுநர் உரிம முறையைத் தனியார்மயமாக்க வழிவகுக்கும். இதுபோன்ற மையங்கள் முறையான சரிபார்ப்பு மற்றும் சோதனை இல்லாமல் ஓட்டுநர் உரிமம் வழங்குமோ என்ற அச்சம் நிலவுகிறது.