இன்றைய சூழலில் மது அருந்தாத நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை என வயது வித்தியாசம் இல்லாமல் பலருக்கு மதுப்பழக்கம் வழக்கமாகி விட்டது. அதிலும் கட்டுப்பாடு இல்லாமல் மது அருந்தும் பழக்கம் உடையவர்களுக்கு நாளடைவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. எப்போதாவது குதூகலமாக இருப்பதற்கு என்று மது அருந்தும் பழக்கம் மாறி, மது அருந்தாமல் இன்றைய பொழுதை கடந்து செல்லவே இயலாது என்ற அளவுக்கு அடிமையாகி விட்டனர்.
மதுவுக்கு அடிமையானவர்களுக்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் எண்ணற்ற சிக்கல்கள் ஏற்படும். குடும்ப உறவுகள் மத்தியில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். தீவிரமாக மது அருந்தி வருபவர்களுக்கு கல்லீரல் செயலிழப்பு, இதய நோய், மன அழுத்தம், கவலை போன்ற சிக்கல்கள் உண்டாகும். முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் நாளடைவில் உயிரிழப்பு ஏற்படும். எனவே, ஆரம்பத்திலேயே மது பழக்கதிலிருந்து விடுபடுவது முக்கியம்.
மது பழக்கத்திற்கு அடிமையானவரை எப்படி கண்டறிவது..?
மதுவை தேடுவது :
ஒரு நொடிப் பொழுது கூட மது என்ற சிந்தனையின்றி இவர்களது வாழ்க்கை நகராது. தூங்கி கண் விழித்த பொழுதில் கூட மதுவை தேடி ஓடுபவர்கள் இருக்கின்றனர். இவர்களால் மது அருந்தும் பழக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. சிலர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரியாமல் மறைந்து குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
எதிர்மறை விளைவுகள் குறித்து கவலை கிடையாது :
மது அருந்துவதால் எத்தகைய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது இவர்களுக்கு தெரியும். தன்னுடைய உடல் நலனுக்கும் சரி, குடும்பத்திற்கும் சரி, மதுவால் தீமைகள் ஏற்படும் என்று தெரிந்தும் அதற்கு இவர்களின் மனம் கவலை கொள்ளாது. மாறாக குடித்தே தீர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
சகிப்பற்றதன்மை மற்றும் முன்னுரிமை :
சராசரியாக மற்ற நபர்கள் அருந்துகின்ற அளவுக்கான மது இவர்களுக்கு போதுமானதாக இருக்காது. இன்னும் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சிலருக்கு மது அருந்தாவிட்டால் உடல் நடுக்கம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களைக் காட்டிலும் மதுவுடன் பொழுது கழிக்கவே அதிக விருப்பம் கொள்வார்கள். கையில் கிடைக்கும் பணத்தை எல்லாம் குடித்தே தீர்க்கும் மனநிலை உடையவர்களாக இருப்பார்கள்.
போதை பழக்கத்தில் இருந்து விடுபடுவது எப்படி?
* மதுவை கைவிடுவதற்கான மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்பேரில் எடுத்துக் கொள்ளலாம். உள்நோயாளியாகவும் சிகிச்சை பெறலாம்.
* மனதிற்கு மகிழ்ச்சியை தருகின்ற பிற நடவடிக்கைகளின் மீது கவனம் செலுத்துதல் மற்றும் ஆர்வம் கொண்டிருத்தல் மூலமாக மதுவுக்கான சிந்தனையை மட்டுப்படுத்தலாம்.
* போதை மறுவாழ்வு மையங்களில் சேர்ந்து தியானம், யோகா போன்ற பயிற்சிகளை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
* மதுவுக்கு எதிரான சிந்தனை கொண்ட நண்பர்கள் மற்றும் சமூகங்களுடன் இணைந்து பழகலாம்.