பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்பான ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு, அவரது மைத்துனரும் லாட்டரி மார்டினின் மகனுமான ஜோஸ் சார்லஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன். மார்ட்டினின் மகள் டெய்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்ற போதெல்லாம் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஆதவ் அர்ஜுனின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெறும்.
விசிகவில் இருந்தபோதே விஜய்க்கு ஆதரவாக செயல்படுவதாக சர்ச்சையில் சிக்கி, கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, தற்போது தவெகவில் இணைந்து திமுக மற்றும் பாஜகவிற்கு எதிராக தீவிரமாக களமாடி வருகிறார்.
அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் பேசிய ஆதவ் அர்ஜூனா திமுக மற்றும் பாஜகவை எதிர்த்து கடுமையாக விளாசினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறித்து பேசிய ஆதவ் அர்ஜூனா, “பல பொய் பிரச்சாரங்களை உருவாக்க வேண்டும் என்ற கோணத்தில் செட் செய்யப்பட்டவர் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. டெல்லியில் பிரதமர் மோடி அமர்ந்து கொண்டு மற்ற மாநிலங்களில் செட் செய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் திமுக அண்ணாமலையையே செட் செய்து விட்டது
நன்றாக கவனித்தால் தெரியும், திமுகவின் பிரச்சினைகளை அவர் எப்படி திசை திருப்புவார் என்று. நமது தலைவர் விஜய் புலி மாதிரி அமைதியாக இருக்கும் போது திடீரென ஒரு ஆடு வந்து சம்பந்தமே இல்லாமல் வந்து, தொழிலை சம்பந்தப்படுத்தி பெண்ணை கேவலமாக பேசியிருக்கிறார். ஒரு பெண்ணை கேவலமாக பேசும் தலைவரை பாஜக வைத்திருக்கும் போதே தெரிந்துவிட்டது அந்த கட்சியின் நிலைமை.” என விமர்சித்தார்.
இந்நிலையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனது தங்கை கணவர் ஆதவ் அர்ஜுனா குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக மக்களின் நலனுக்காக அயராது பாடுபடும் தமிழக பாஜக தலைவர் திரு.கே. அண்ணாமலைக்கு எதிராக ஆதவ் அர்ஜூனா வெளியிட்ட கருத்துக்கு எனது ஆட்சேபனையையும் மன்னிப்பும் தெரிவித்துக் கொள்கிறேன். பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி வைத்துக்கொண்டு, தனது அரசியல் மற்றும் நிதி பேராசையை பூர்த்தி செய்ய, தனது மாமனார் பணத்தை, அதாவது என் தந்தையின் பணத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்.
எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கிறார், தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குகிறார். அவரது முட்டாள்தனத்துடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதையும், அவரது செயலால் மேலும் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால், நீதிமன்றத்தை அணுகி எனது நற்பெயரைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்” என பதிவிட்டுள்ளார்.