நாங்குநேரியில் தாக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் கல்வி செலவுகளை தானே ஏற்க உள்ளதாக அமைச்சராக அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் 17 வயது மகனும், 14 வயது மகளும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வந்துள்ளனர். பள்ளியில் மாணவர்களுக்கு இடையே கடந்த சில வாரங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டதன் காரணமாக மகன் கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இதையடுத்து பள்ளி நிர்வாகம் பெற்றோரை தொடர்பு கொண்டு மகனை பள்ளிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளது. இதையடுத்து பள்ளிக்கு சென்றவரிடம் ஆசிரியர்கள் விசாரித்தனர். அப்போது பள்ளியில் சில மாணவர்கள் தன்னை தாக்குவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாங்குநேரியிலுள்ள வீட்டில் அம்மாணவரும், அவரது தங்கையும் இருந்தபோது 3 பேர் கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அண்ணனையும், தங்கையையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு திரையுலகினர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி; குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட இரு மாணவர்களுடைய கல்வி செலவையும் தானே முழுவதுமாக ஏற்பதாக தெரிவித்துள்ளார்.