மதுரை மாவட்டம் மேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைதான ஞானசேகரனின் மொபைல் ரெக்கார்ட் என்னிடம் உள்ளது. டிசம்பர் 23ஆம் தேதி யாரிடம் பேசினார் என்ற ரெக்கார்டு இருக்கிறது. 24ஆம் தேதி யாரிடம் பேசினார் என்பதும் உள்ளது. அதில் சில காவல்துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளனர்.
அனைத்து வேலைகளையும் அண்ணாமலையே செய்ய முடியாது. நான் ஒன்றும் மோப்பநாய் கிடையாது. யார் அந்த சார் என்பதை முதலில் சொல்லுங்கள். சட்டத்திற்கு புறம்பாகதான் நான் சி.டி.ஆர் எடுத்தேன். சி.டி.ஆர் எடுப்பதற்கு அதிகாரம் இல்லை. ஆனால், என்னிடம் இருக்கிறது. ஞானசேகரனின் ஒரு வருட கால் ரெக்கார்டு என்னிடம் இருக்கிறது. யார் யாரிடம் பேசினார்? எத்தனை முறை பேசினார்? 23ஆம் தேதி சம்பவம் நடந்த பிறகு யாரிடம் பேசினார்? என்ற விவரத்தை ஒருநாள் வெளியிடத்தான் போகிறேன்.
FIR லீக்கானது யாரால் என்பதை தான் கேட்கிறோம், இந்த விஷயத்தில் பத்திரிக்கையாளர்களோடு முழுமையாக நாங்கள் இருக்கிறோம். சி டி ஆர் விரைவில் வெளியிட தான் போகிறோம். வழக்கு கடைசி நிலைக்கு போகவில்லை வேறு எங்கோ திசை திரும்புகிறது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செல்லாத முதல்வர், வல்லாளப்பட்டிக்கு வந்த போதே எங்கு அரசியல் உள்ளது என தெரிகிறது.
மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தும் போது வராத முதல்வர், மக்கள் பேரணி சென்ற போது வராத முதலமைச்சர், எல்லாம் முடிந்த பிறகு, அவசர அவசரமாக அவரை முந்தி யாரும் வந்து விடக்கூடாது என்பதற்காக வந்துவிட்டார். அதில் வேகம் காட்டிய முதலமைச்சர் அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஏன் வேகம் காட்டவில்லை” என்று குற்றம்சாட்டினார்.