ஜார்க்கண்டில் உள்ள அரசு கோழிப்பண்ணையில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை, மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள தேசிய கால்நடை நோய்த் தடுப்பு நிறுவனத்தின் ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில், H5N1 எனப்படும் பறவைக்காய்ச்சல் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

2023 பிப்ரவரி 17-ம் தேதி எடுக்கப்பட்ட மாதிரி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதையடுத்து ஜார்க்கண்ட் முழுவதும் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு 2023 பிப்ரவரி 20-ம் தேதி அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் கடைசியாக பறவைக் காய்ச்சல் வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கான அதிரடித் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய கால்நடைப் பராமரிப்புத்துறை சார்பில் இரு உறுப்பினர்களைக் கொண்ட மத்தியக் குழு அமைக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலத்தின் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல் அம்மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளையும், மனிதர்களுக்கு நோய் பரவல் தடுப்பை கண்காணிக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் மத்தியக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு, மத்திய கால்நடைப் பராமரிப்புத்துறை ஆணையர், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநில கால்நடைப் பராமரிப்புத்துறை செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.