சிலை கடத்தல்காரர்கள் சுபாஷ் கபூர், தீனதயாளன் ஆகியோருக்கு உதவியதாக பொன் மாணிக்கவேல் மீது மத்திய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணை தொடர்பாக, பாலவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். ஐந்து அதிகாரிகள் கொண்ட குழு நேற்று காலை ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் வீட்டிற்குச் சென்று ஏழு மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தியது.
திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கோயிலில் கடந்த 2005-ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் திருடுபோயின. இவற்றில், 6 சிலைகள் விருதுநகர் மாவட்டம் ஆலப்பட்டியில் கடந்த 2008-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன. இந்த சிலைகளை மீட்ட போலீஸார், அவற்றை சர்வதேச கும்பலுடன் சேர்ந்து வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் விற்க உதவியதாகப் புகார் எழுந்தது.
இந்நிலையில், இந்த வழக்குதொடர்பாக சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கில் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த காதர் பாஷா, சிறப்பு உதவிகாவல் ஆய்வாளராக இருந்த சுப்புராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் பொய் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், அவர் மீது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காதர் பாஷா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், டெல்லி சிபிஐ கடந்த 2022-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்த வழக்குதொடர்பாக சென்னை பாலவாக்கத்தில் வசித்து வரும் பொன்.மாணிக்கவேல் வீட்டுக்கு நேற்று காலை டெல்லியில் இருந்து சிபிஐ அதிகாரிகள் வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக பொன்.மாணிக்கவேலிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொன்.மாணிக்கவேல்; என்னிடம் வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் இருந்தன. அவற்றை முன்னாள் சிபிஐ விசாரணை அதிகாரியிடம் கொடுக்க முடியவில்லை. தற்போது, புதிதாக வந்திருக்கும் விசாரணை அதிகாரியிடம், அந்த ஆவணங்களை கொடுத்து அவர்களுக்கு உதவி செய்திருக்கிறேன் என கூறினார்.