நீலகிரி வரும் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அந்த பேருந்தையே பறிமுதல் செய்ய வேண்டும். பேருந்தின் உரிமத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும். இப்படி கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சுற்றுலா தலங்களான நீலகிரி மற்றும் கொடைக்கானலில் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமல்படுத்துவது தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோர் காணொலியில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
ஏற்கனவே சுற்றுலா வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட இ-பாஸ் முறையை தொடர வேண்டும். சுற்றுலாவின் போது குப்பைகள் அதிகரிக்க காரணமாக இருக்கும் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். நீலகிரி வரும் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அந்த பேருந்தையே பறிமுதல் செய்ய வேண்டும். பேருந்தின் உரிமத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும். இப்படி கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும்.
கடந்த 2019ம் ஆண்டு 27 விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டது. ஆனால், அரசு அலுவலகங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. அதனால், பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். நீதிமன்றம் உத்தரவு தான் பிறப்பிக்க முடியும். அதிகாரிகள் தான் அதை அமல்படுத்த முடியும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.