தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் தற்போது துரோக யுத்தம் நடத்தி வருவதாகச் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் திமுக அரசை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பேசிய அவர், ”தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் தற்போது துரோக யுத்தம் நடத்தி வருகிறார். தேனி மாவட்டத்திற்குள் நுழைய முடியுமா? என்று சிலர் சவால் விட்டார்கள். திமுகவின் கைக்கூலியாக மாறி சதித்திட்டம் தீட்டினால் அது பகல் கனவாகத் தான் முடியும். எடப்பாடி பழனிசாமி, 234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியை மட்டுமே சுற்றி வந்தார். இவர்தான் தலைவரா எனவும் கேள்வி எழுப்பினார். தேனி மாவட்டத்தில் தான் அதிக பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளார்கள். விசுவாசம் மிக்க மாவட்டத்திலிருந்து சில துரோகிகள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
மேலும், அம்மா வாழ்ந்த கோயிலாகப் போற்றப்பட்ட அதிமுக தலைமை கழகத்தை உடைத்ததை எந்த தொண்டர்களும் மன்னிக்க மாட்டார்கள். கோயில் போல இருந்த இடத்தை குண்டர்களை வைத்துச் சூறையாடினீர்கள், உங்கள் வீட்டை உடைக்க எவ்வளவு நேரம் ஆகும். அதிமுகவின் தொண்டர்களின் உழைப்பால் தான் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி ஆனார். ஓபிஎஸ் மகன் தற்போது எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் என் அரசியல் வாழ்க்கையை விட்டுத் தான் விலகத் தயார்” என்றார்.