இந்தியாவின் பெயரை மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக அதிமுக மூத்த தலைவர் செல்லூர் ராஜூ நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
‘இந்தியா’ என்ற பெயரை ‘பாரத்’ (Bharat) என்று மாற்றுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தியாவின் பெயரை மாற்றுவதால் மட்டும் நாட்டில் நிலவும் பிரச்சனைகள் தீர்ந்துவிடப் போகிறதா? அல்லது விலைவாசி தான் குறைந்துவிடப் போகிறதா? என எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றன.
இதற்கிடையே, டெல்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியின் மேஜையில் ‘இந்தியா’ என்பதற்கு பதில் ‘பாரத்’ என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருந்தது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இப்படி பெயர்ப்பலகையை மாற்றி வைப்பது சுத்த சர்வாதிகாரத்தனம் என பல கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். “நாட்டுல எத்தனையோ பிரச்சனை இருக்கு. அதை எல்லாம் விட்டுட்டு இதை பற்றி ஏன் பேசணும்? பிரதமரே இதுபற்றி பேச மறுத்துவிட்டார். அப்புறம் நம்ம பேசி என்ன பிரயோஜனம். வேற ஏதாவது கேள்வி இருக்கா” என்றார்.
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர், “சார் இப்போது இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்பட்டால் அனைத்திந்திய அதிமுக என்பதற்கு பதிலாக அனைத்து பாரதிய அதிமுக என மாற்றிக் கொள்வீர்களா?” எனக் கேட்டார். இதை கேட்டதும் சிரித்த செல்லூர் ராஜு, இது ரொம்ப புதுசா இருக்குய்யா. இந்தியாவின் பெயர் முதலில் மாறட்டும். அதற்கு அப்புறம் அதிமுக பெயரை மாற்றுவது குறித்து யோசிக்கலாம்” என பதிலளித்தார்.