குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் கோடை வெப்பத்தினால் அதிகம் பாதிக்கப்படுவதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் கோடை வெயில் அதிகரித்துவரும் சூழ்நிலையில் நம்மையும், நம் குடும்பத்தினரையும், வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள, அதிக அளவிலான நீர் பருக வேண்டும். தாகம் இல்லை என்றாலும் போதிய அளவிலான நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் மற்றும் குளிர்பானங்கள் பருகுவதைத் தவிர்த்து அதிக அளவில் மோர், இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக் கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றைப் பருகலாம்
குறிப்பாக கோடைகாலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது மிகுந்த நன்மையை அளிக்கும். மேலும், வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மிக முக்கியமாக, திறந்த வெளியில் வேலை செய்யும் போது தலையில் பருத்தி துணி அல்லது துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும். கடினமாக வேலை செய்யும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் கோடை வெப்பத்தினால் அதிகம் பாதிக்கப்படுவதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றி தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
சூரிய வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும் போது, களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக வெப்பம் குறைவாக உள்ள குளிர்ந்த இடத்திற்குச் செல்லலாம். மயக்கம். உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால் மணிக்கட்டு அல்லது அடி வயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கலாம். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாட வேண்டும். குறிப்பாக, வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆஸ்பிரின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகளைக் கொடுக்கக்கூடாது.
மேலும், விவசாயிகள் தங்கள் கால்நடைகளை நிழற்பாங்கான இடங்களில் கட்டி வைத்து, உரிய அளவில் நீர் மற்றும் பசுந்தீவனங்களைக் கொடுத்து பராமரித்திடவும். கோடை காலத்தில் கால்நடைகளைத் தாக்கும் நோய்கள் மற்றும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கால்நடைத் துறையினரால் தெரிவிக்கப்படும் வழிமுறைகளை கடைபிடித்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.