ஓமலூர் அருகே டிரேடிங் நிறுவனம் நடத்தி ரூ.2 கோடிக்கு மேல் மோசடி செய்த பெண்ணை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே எம்.செட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவரின் மனைவி மாலதி என்பவர் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.6,000 வட்டி தருவதாக கஞ்சநாயக்கன் பட்டியில் உள்ள கே.எம்.கே.எஸ்.குளோபல் டிரேடிங் என்ற நிதி நிறுவனம் அளித்த பொய் வாக்குறுதியை நம்பி ரூ.62 லட்சத்து 18 ஆயிரம் முதலீடு செய்திருப்பதாக கூறினார். ஒருசில மாதங்கள் மட்டுமே வாக்குறுதிப்படி ஊக்கத்தொகை வழங்கியதாக குறிப்பிட்டவர் தனது பணத்தை திருப்பி தராமல் நிறுவனத்தினர் தலைமறைவாகி விட்டதாக தெரிவித்தார்.
புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், கோகிலா என்பவரை கைது செய்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பலரிடமிருந்து ரூ.2 கோடிக்கு மேல் பணம் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள நாகராஜ் அவருடைய மனைவி சத்யா உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். பணம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தவர்கள் சேலம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கலாம் என்றும் மோசடியில் ஈடுப்பட்டவர்கள் தங்கி இருக்கும் இடம் பற்றி தெரிந்தால் அதையும் தெரிவிக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.