கரூரில் தண்ணீர் பிடிப்பதில் இரண்டு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை கொலையில் சென்று முடிவடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் வசித்து வந்தனர் பத்மாவதி இளங்கோ தம்பதியர். இவர்களது வீட்டின் அருகில் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்கும் குழாய் ஒன்று இருக்கிறது. சம்பவம் நடந்த தினத்தன்று பத்மாவதி தண்ணீர் எடுக்க சென்றிருக்கிறார். அப்போது அவர்கள் வீட்டு எதிரே வசித்து வருபவர் கார்த்தி. இவர் அப்பகுதியில் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கார்த்தியின் மனைவியும் அப்போது தண்ணீர் எடுக்க வந்திருக்கிறார். அப்போது பத்மாவதி மற்றும் கார்த்தி மனைவிக்கு இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தண்ணீர் எடுத்துவிட்டு கண்ணீருடன் சென்று இருக்கிறார் கார்த்தியின் மனைவி.
மனைவி கண்ணீருடன் வருவதை பார்த்த கார்த்தி ஆத்திரமடைந்து காரணம் கேட்க பத்மாவதி தன்னுடன் சண்டையிட்டதை தெரிவித்திருக்கிறார் கார்த்தியின் மனைவி. இதனைத் தொடர்ந்து கறி வெட்டும் அறிவாளை எடுத்துக்கொண்டு இளங்கோவன் வீட்டிற்கு சென்ற கார்த்தி பத்மாவதியையும் இளங்கோவனையும் சரமாரியாக வெட்டி இருக்கிறார். பின்னர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் பத்மாவதி. இளங்கோவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு தப்பியோடிய கார்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். குழாயடி சண்டை கொலையில் முடிந்த சம்பவம் கரூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.