மதுரையில் சாதிச் சான்றிதழ் கோரி பழங்குடியின மாணாக்கர் நடத்தும் போராட்டம் நீடித்து வருகிறது. சாதிச்சான்று கிடைக்காவிட்டால் திரும்ப மலைப் பகுதிக்கே திரும்ப வேண்டியதுதான் என மாணவ மாணவிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மதுரை சமயநல்லூர் அருகே பரவை சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவிகள் காட்டுநாயக்கர் சாதிச் சான்றிதழ் வழங்க கோரி வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். காட்டுநாயக்கர் பழங்குடியினர் என்ற சாதிச்சான்றிதழ் கடந்தாண்டு வரை தங்களுக்கு வழங்கப்பட்டு வந்தததாகவும், தற்போது அதை நிறுத்தியதாக மாணாக்கரும் பெற்றோரும் தெரிவிக்கின்றனர். இதனால், கல்லூரியில் சேர இயலாத அவல நிலை உள்ளதாகவும் சில கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் தர வேண்டிய நிலை உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
போராட்டம் நடத்தும் பொதுமக்களின் ஒருவர் கூறுகையில், “எனக்கும் என் கணவருக்கும் சாதி சான்றிதழ் உள்ளது. ஆனால் படிக்கும் எனது 3 குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் கொடுக்க மறுக்கிறார்கள். அது எந்த விதத்தில் நியாயம்..? முன்னதாக ஆய்வு நடத்திதான் காட்டு நாயக்கர் சாதிசான்றிதழ் வழங்கப்பட்டது. இப்போது மீண்டும் ஆய்வு செய்வதாக கூறுகிறார். அந்த ஆய்வு நடத்தக்கூடாது. படிக்கும் பிள்ளைகளின் வாழ்க்கையை கொஞ்சம் நினைவு கூர்ந்து, சான்றிதழ் வழங்க வேண்டும். இதனால் 500க்கு மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மாணவர்களின் நலனுக்காக மட்டுமே சாதி சான்றிதழ் வேண்டி போராட்டம் நடத்துகிறோம். அது இருந்தால் தான் பீஸ் கம்மியாகும். நாங்கள் ஏழைகள். அதிக பணம் செலுத்தி கல்லூரி படிக்க வைக்க எங்களிடம் வசதி இல்லை.. சாதி சான்றிதழ் இருந்தால் அதன் மூலம் கிடைக்கும் இடஒதுக்கீடு வைத்து எங்கள் குழந்தைகள் கல்வி கற்பார்கள்.. விரைவில் எங்களுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.