தலைநகர் சென்னையில் பொறுத்தவரையில் எப்போதும் போக்குவரத்தில் நெரிசல் அதிகமாக காணப்படும் அதன் காரணமாக, தலைநகர் சென்னையில் எண்ணில் அடங்காத விதத்தில் மேம்பாலங்கள் கட்டப்பட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனாலும் எவ்வளவு மேம்பாலங்கள் கட்டினாலும் கூட இன்றளவும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறைந்த பாடு இல்லை.
ஆகவே அவ்வப்போது காவல்துறை போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் மெட்ரோ உள்ளிட்ட பல முக்கிய பணிகள் நடைபெறும் சமயத்தில் அந்த பணிகள் நடைபெறும் பகுதிக்கு வாகனங்கள் செல்லாதவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான்.
அந்த வகையில், சென்னையில் மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் பகுதியில் காந்தி சிலைக்கு பின்புறம் மெட்ரோ ரயில் பணி நடந்து வருவதால் அந்த பகுதியில் நாளை முதல் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
அதன் அடிப்படையில் லூப் சாலை அதாவது, இணைப்பு சாலை மற்றும் காமராஜர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் கலங்கரை விளக்கத்திலிருந்து மெரினா கடற்கரை இணைப்பு சாலை மூலமாக போர் நினைவு சின்னத்திற்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
போர் நினைவுச் சின்னத்திலிருந்து வரும் வாகனங்கள் மெரினா கடற்கரை இணைப்பு சாலை வழியாக கலங்கரை விளக்கம் நோக்கி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது அத்துடன் கலங்கரை விளக்கத்திலிருந்து மெரினா கடற்கரை இணைப்பு சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் காந்தி சிலைக்கு பின்புறம் தடை செய்யப்பட்ட பகுதி வரையில் செல்லலாம் என்றும், அதன் பிறகு முன்னோக்கி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.