சென்னை ஈசிஆரில் திமுக கொடி கட்டிய காரில் வந்த இளைஞர்கள், பெண்களின் காரை மறித்து அச்சுறுத்திய சம்பவத்தில் நேற்றிரவு கல்லூரி மாணவர் ஒருவர் கைதான நிலையில், மேலும் 2 பேரை கைது செய்தது காவல்துறை.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் சென்ற காரை தி.மு.க. கொடி பொருத்திய சொகுசு காரில் துரத்திச் சென்று இளைஞர்கள் வழிமறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோவில், இரண்டுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் ஒரு காரில் ஈ.சி.ஆர் சாலையில் கடந்த 25-ம் தேதி நள்ளிரவு சென்றுள்ளனர். அப்போது, அந்த காரை தி.மு.க கட்சிக்கொடி பொருத்திய காரில் வந்த ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடுரோட்டில் துரத்தி சென்றனர்.
இளைஞர்களை கண்டு அதிர்ச்சியடைந்த காரில் இருந்த பெண்கள் கூச்சலிட்டுள்ளனர். திடீரென அந்த காரில் இருந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்கள் பயணித்த காரை நோக்கி வேகமாக ஓடி கார் மீது தாக்குதல் நடத்தினார். அந்த பெண்கள் பயணித்த காரை பின் தொடர்ந்து வந்த அந்த கும்பல் மீண்டும் இடைமறித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளில் இளைஞர்கள் மீது கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை மறித்து அச்சுறுத்திய சம்பவத்தில் நேற்றிரவு கல்லூரி மாணவர் ஒருவர் கைதான நிலையில், தற்பொழுது மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.