மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் இன்று மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது. கேரள மாநிலம் வயநாட்டில் கபினியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், நீர்வரத்து அதிகரித்து கபினி அணை நிரம்பியது. அப்பகுதியில் மழை நீடிப்பதால் கபினி அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட உபரி நீர் இன்று காலை முதல் மேட்டூர் அணைக்கு வர துவங்கியது.
கபினி அணையின் உபரி நீர்வரத்து காரணமாக, நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 4,047 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர், இன்று காலை வினாடிக்கு 5,054 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நேற்று காலை 43.22 அடியாக இருந்த மேட்டூர் அணையில் நீர்மட்டம், இன்று காலை 43.83 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர் திறப்பை விட வரத்து அதிகமாக இருப்பதால், ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 0.61அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 14.14 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் காவிரியில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் அடிப்பாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க வலை விரிக்கவில்லை. செட்டிப்பட்டி, கோட்டையூர் பரிசல் துறைகளில் பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
Read More : ”ரவுடிகளின் வீட்டிற்கே சென்று எச்சரிக்கை”..!! சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு..!!