இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான உறவில் சமீப காலமாக விரிசல் ஏற்பட்டு வருகிறது. பிரதமர் மோடி லட்சத்தீவு பற்றிய புகைப்படத்தை பகிர்ந்ததற்கு மாலத்தீவு அமைச்சர்கள் இந்தியர்களை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தனர். இந்தப் பிரச்சனையிலிருந்து இந்தியா மற்றும் மாலத்தீவு அரசுகளுக்கு இடையேயான உறவு சுமூகமாக இல்லை.
இந்நிலையில் மாலத்தீவு நாட்டிற்கு சொந்தமான மீன் பிடி கப்பலில் இந்திய கடற்படை வீரர்கள் அத்துமீறி நுழைந்ததாக மாலத்தீவு நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையை வெளியிட்டு இருந்தது மேலும் இது தொடர்பாக இந்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில் மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்கள் விரைவில் வெளியேறுவார்கள் என அந்நாட்டின் அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ” மாலத்தீவு நாட்டின் 3 விமான தளங்களில் இந்திய ராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்கள் வருகின்ற மே மாதம் பத்தாம் தேதிக்குள் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். ஒரு விமான தளத்தில் உள்ள வீரர்கள் வருகின்ற மார்ச் மாதம் 10-ஆம் தேதிக்குள் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்த அவர் வருகின்ற மே மாதம் பத்தாம் தேதிக்குள் மற்ற 2 விமான தளங்களில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் வெளியேறி விடுவார்கள் என தெரிவித்திருக்கிறார்.
மாலத்தீவு நாட்டின் பாதுகாப்பு மற்றும் அவசர மருத்துவ உதவி தேவைகளுக்காக 81 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவு ராணுவ விமான தளங்களில் பணியமர்த்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்களும் ஒரு சிறிய ரக விமானமும் மாலத்தீவில் இயங்கி வருகிறது. சீனா ஆதரவு கொண்ட அதிபர் முகமது முய்சு மாலத்தீவு நாட்டின் அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து இந்திய அரசிற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.