இந்தியாவின் முதல் டபுள் டக்கர் எலக்ட்ரிக் பேருந்து மும்பை சாலைகளில் இயக்கப்பட்டது. இதில் அடங்கியுள்ள வசதிகள் மற்றும் கட்டணம் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவின் முதல் மின்சார டபுள் டக்கர் பேருந்து சத்திரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல் மற்றும் நேஷனல் சென்டர் ஆஃப் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் ஆகியவற்றுக்கு இடையே இயக்கப்பட்டுள்ளது. சிஎஸ்எம்டியில் இருந்து புறப்படும் முதல் பேருந்து காலை 8.45 மணிக்கும் கடைசி பேருந்துகள் மாலை 4 மணிக்கும் இயக்கப்படுகிறது. முதல் பேருந்து NCPA-லிருந்து காலை 9.02 மணிக்குப் புறப்பட்டு மாலை 4.20 மணிக்குத் திரும்பும். அதேபோல் கடைசி பேருந்து மதியம் 12.40 மணிக்கும் இரவு 8 மணிக்கும் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஏசி டபுள் டக்கர் எலக்ட்ரிக் பேருந்து வார இறுதி நாட்களில் “ஹெரிடேஜ் டூர்ஸ்”க்கு பயன்படுத்தப்படும். இதற்கான கட்டணம் தினசரி பயண டிக்கெட்டில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ-115 வழித்தடத்தில் 5 கிலோமீட்டர் பயணத்திற்கு ரூ.6. ஹெரிடேஜ் டூரின் மேல்தளத்தின் விலை ரூ.150, கீழ்தளம் ரூ.75 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் CSMT கேட்வே ஆஃப் இந்தியா, குர்லா முதல் BKC மற்றும் பாந்த்ரா ஈஸ்ட் வரை இந்த பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகளில் நடத்துனர் கிடையாது, டிக்கெட்டுகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. பயனர்கள் Chalo ஸ்மார்ட் கார்டை வாங்க வேண்டும் அல்லது Cjhalo பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டும். பயணத்தைத் தேர்ந்தெடுத்து, நுழைவு கதவில் உள்ள இயந்திரத்தில் மொபைல் மூலம் டிக்கெட் எடுத்து அதேபோல் இறங்கும் போது மீண்டும் ஒரு முறை மொபைல் மூலம் உள்ள டிக்கெட்டை கதவின் அருகே காட்ட வேண்டும். இ-வாலட் UPI அல்லது ஆப்ஸுடன் இணைக்கப்பட்ட ஆன்லைன் பேமெண்ட் மூலம் ஆன்லைனில் பணம் கழிக்கப்படும்.
மின்சார டபுள் டக்கர் பேருந்தில் 73 இருக்கைகள் உள்ளன. இதில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன, மேலும் 80 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும் என கூறப்படுகிறது. தற்போது, போக்குவரத்து நிறுவனம் பல்வேறு அளவுகளில் 45 மின்சார ஏசி பேருந்துகளைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஆண்டு மேலும் 100 பேருந்துகள் வாஙக் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த பேருந்து, மலிவான கட்டணத்தில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பயணம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.