அறக்கட்டளைகளுக்கு வழங்கப்பட்ட சொத்துக்களை தனி நபர்கள் தங்களது பெயரில் மாற்றுவதற்கான உரிமை கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த ஒருவர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், 1943-ம் ஆண்டு முத்துக்கிருஷ்ணன் மகன் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது, மனுதாரர் கே.எம்.சாமி தாக்கல் செய்த இறப்பு சான்று உண்மையாக இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
போலி சான்றை உருவாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி,ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துக்களை நிர்வகிப்பதற்கான மேலாளராகவே முத்துக்கிருஷ்ணன் நியமிக்கப்பட்டதாகவும், அவரது மறைவிற்கு பிறகு அந்த சொத்துகளை உரிமை கொண்டாட யாருக்கும் உரிமையில்லை என்று உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
அறக்கட்டளைக்காக தானமாக வழங்கப்பட்ட சொத்துகளை தனி நபர்களின் பெயர்களில் மாற்ற முடியாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நடவடிக்கையை நான்கு வாரங்களில் முடிக்க வேண்டுமென அறநிலையத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அறக்கட்டளை சொத்துகளில் இருந்து ஈட்டப்படும் வருமானத்தை, எந்த நோக்கத்திற்கான அறக்கட்டளை துவங்கப்பட்டதோ, அதற்காக செலவிட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.