பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, 1960 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான சிந்து நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்கால நடவடிக்கை குறித்து விவாதிக்க வெள்ளிக்கிழமை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்தில் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பல ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது முடிவை செயல்படுத்துவதில் சட்டப்பூர்வ சவால்கள் உட்பட ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.. “பாகிஸ்தான் உலக வங்கியை அணுக முடிவு செய்தாலும், இந்தியா அதன் பதிலடியைத் தயாராக உள்ளது, மேலும் திறம்பட எதிர்கொள்ளும்” என்று இதுகுறித்து நன்கு அறிந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காமல் பார்த்துக் கொள்ள இந்தியா மூன்று திட்டங்களை செயல்படுத்தி வருவதாக ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்தார். அதாவது, அண்டை நாட்டிற்கு தண்ணீர் விநியோகம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக புது தில்லியில் மூன்று திட்டங்கள் உள்ளன – ஒரு நீண்ட கால திட்டம், ஒரு குறுகிய கால திட்டம் மற்றும் ஒரு இடைக்கால திட்டம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்
லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) ஒரு பிரிவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பயங்கரவாதிகளால் கடந்த செவ்வாய்க்கிழமை பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான இராஜதந்திர உறவுகளை குறைத்து வருவதாகவும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதாகவும் இந்தியா அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை பாதுகாப்புக் குழு (CCS) கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதிகாரப்பூர்வமாக முடிவை அறிவித்த இந்தியா
ஜம்மு மற்றும் காஷ்மீரை குறிவைத்து பாகிஸ்தான் நடத்தும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் உரிமைகளைத் தடுக்கிறது என்று இந்தியாவின் நீர்வளச் செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜி, பாகிஸ்தான் பிரதிநிதி சையத் அலி முர்தாசாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தார்..
மேலும் “ இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரை குறிவைத்து பாகிஸ்தானால் தொடர்ந்து நடத்தப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையே நாம் பார்த்திருக்கிறோம்,” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் முடிவுக்கு பாகிஸ்தானின் எதிர்வினை
இதற்கு பதிலளிக்கும் விதமாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் நதி நீரைத் தடுக்க அல்லது திசைதிருப்ப இந்தியா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் “போர்ச் செயல்” என்று கருதப்படும் என்று பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக் குழு கூறியது. 1960 ஒப்பந்தத்தை அதன் 240 மில்லியன் குடிமக்களுக்கு உயிர்நாடியாகக் குறிப்பிட்ட பாகிஸ்தான், இந்த ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக நிறுத்தி வைக்க முடியாது என்றும், அதற்கு பதிலடி கொடுப்போம் என்றும் எச்சரித்தது.
சிந்து நீர் ஒப்பந்தம் என்றால் என்ன?
இந்தியாவும் பாகிஸ்தானும் 1960 இல் சிந்து நீர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இதில் உலக வங்கி கூடுதல் கையொப்பமிட்டது. இந்த ஒப்பந்தம் சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளின் நீரை இரு நாடுகளுக்கும் இடையில் சமமாகப் பிரிக்க முயன்றது. ஒப்பந்தத்தின் கீழ், மூன்று கிழக்கு நதிகளான பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ் ஆகியவற்றிலிருந்து தண்ணீர் இந்தியாவிற்கும், மூன்று மேற்கு நதிகளான செனாப், சிந்து மற்றும் ஜீலம் ஆகியவற்றிலிருந்து தண்ணீர் பாகிஸ்தானுக்கும் ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : பஹல்காம் தாக்குதல்.. மோடியை மாத்தணும்.. இல்ல அவரே பதவி விலகணும்.. பாஜக மூத்த தலைவர் பரபரப்பு பேச்சு..