தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அமராவதி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த 2 மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 946 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு, தலையாறு, மறையூர், கோவில் கடவு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது. இப்பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மறையூர் கோவில்கடவு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு உடுமலை-மூணாறு சாலையில் உள்ள, தூவானம் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
அதேபோல், கொடைக்கானல் மலையின் மேற்கு பகுதிகளில் பெய்யும் மழையால் தேனாற்றிலும், வால்பாறை மலையின் கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் மழையால் சின்னாறு மற்றும் வனப்பகுதியிலுள்ள காட்டாறுகள் வழியாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக வினாடிக்கு 600 கனஅடி வரை மட்டுமே இருந்தது. தற்போது 1,383 கன அடியாக அதிகரித்து சராசரி நீர் வரத்தாக 2,334 கனஅடி வரை உயர்ந்துள்ளது. அமராவதி அணையில் மொத்தமுள்ள 90 அடியில் 69 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அடுத்த சீசன் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.