மிக்ஜாம் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு – வடகிழக்குப் பகுதியில் சுமார் 110 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் அது நகர்ந்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் வலுப்பெற்ற மிக்ஜாம் புயல் இன்று மாலை 5.30 மணியளவில் அதி தீவிர புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை புயலாகவே வட தமிழக கடலோர பகுதிகளை கடந்து செல்கிறது.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை, பலத்த காற்று தொடரக்கூடும். எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, மின் கம்பங்கள், மின் கம்பிகள், மரங்கள் அருகே நிற்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.