கால்நடை பராமரிப்பிற்காக வட்டியில்லா கடன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், கால்நடை பராமரிப்புக்கான நடைமுறை மூலதனக் கடன் வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே ஆடு, மாடு ஆகிய கால்நடைகள் வைத்துள்ள விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி மேற்படி நடைமுறை மூலதனக் கடனை பெற்று பயன்பெறலாம்.
கடன் பெறுவதற்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை , நிலவுடைமை தொடர்பாக 10 (1) கணினி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் சான்று ஆகிய ஆவணங்களுடன் கடன் மனு சமர்ப்பிக்க வேண்டும். கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள், அவரவர் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் படிவத்தினைப் பெற்று ரூ.100 பங்குத்தொகை, ரூ.10 நுழைவுக்கட்டணம் செலுத்தி உடன் உறுப்பினராகச் சேர்ந்து மேற்கண்டுள்ள ஆவணங்களுடன் நடைமுறை மூலதனக் கடன் மனுவினைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பினை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு கோழி வளர்ப்பு மானியம்:
கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 2023-24 ஆம் நிதியாண்டில் நாட்டு கோழிவளர்ப்பில் திறன் வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டு கோழிப்பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்த மாவட்டம் ஒன்றுக்கு 3-6 பயனாளிகளை தேர்வு செய்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள பயனாளிகள் சம்பந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் கொண்டவராகவும், அந்நிலம் மனித குடியிருப்புகளிலிருந்து விலகியும் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணம் 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும். விதவைகள், ஆதரவற்றோர்,திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.