ஓபிஎஸ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கப்போவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்ததாக ஓபிஎஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. 2012-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி தன்மீதான ஊழல் வழக்கை, மதுரை நீதிமன்றத்திலிருந்து, சிவகங்கை நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார் ஓபிஎஸ். பின்னர் வழக்கு சிவகங்கையிலுள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
2012-ம் ஆண்டு தமிழக சபாநாயகர் தனபால், ஓ.பி.எஸ் மீது வழக்கு போடுவதற்காக ஏற்கெனவே சட்டமன்றம் கொடுத்திருந்த அனுமதியை திரும்பப் பெற்றார். அதைத் தொடர்ந்து குற்றங்களை நிரூபிக்கும் விதமான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்க்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க போவதாக எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோரை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து கீழமை நீதிமன்றங்கள் விடுதலை செய்ததற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து மேல்முறையீடு செய்து, விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த நிலையில், தற்போது ஓபிஎஸ் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க போவதாக அறிவித்திருக்கிறார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.