பொங்கல் பண்டிகை முடிந்து புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தங்களது சொந்த ஊர்களில் இருந்து வெளியில் சென்று வேலைபார்க்கும் மக்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கே திரும்பியுள்ளனர். இதற்காக தமிழக அரசு சிறப்புப் பேருந்து சேவைகளும் வழங்கி வருகிறது. இதற்கிடையே, போகிப் பண்டிகை, மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய நாட்களில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் அரசு விடுமுறையாகும்.
இந்நிலையில், பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக ஜனவரி 18ஆம் தேதி புதன்கிழமை விடுமுறை அளிக்கப்படுமா? என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செய்தியாளர்களிடம் கூறுகையில், பொங்கல் பண்டிகைக்கு பின் புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.