இது வரை எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் கோடை காலத்திற்கு இணையாக வெப்பம் பொதுமக்களை வாட்டி எடுத்து வருகிறது. நகரத்தில் வாழும் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதனை போக்க ஏசி போன்ற மின் சாதனங்கள் பயன்பாடு அதிகரித்து உள்ளது.அதேபோல் வீட்டிலிருந்து பணிபுரிபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதால் மின் பயன்பாடு பெருகி இருக்கிறது. இதனால் மின்கட்டணம் ரூ.6,000 வரை செலுத்தும் சூழல் உருவாகியுள்ளதாக மக்கள் புலம்பி தவிக்கின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு நாம் வீட்டில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
அதிக மின்சாரத்தை சேமிக்க, வீட்டில் இருந்து எங்காவது வெளியில் செல்லும் பொழுது மின் சாதனங்களை ஆன் செய்துவிட்டு செல்வதற்கு பதிலாக பவர் பாயிண்டை ஆஃப் செய்துவிட்டு செல்ல வேண்டும். நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது அல்லது வீட்டை விட்டு வெளியேறும்போது உங்கள் ஹீட்டர், AC மற்றும் மற்ற மின் சாதனங்களை அணைத்து விட்டு செல்ல வேண்டும்.
அடிக்கடி ப்ரிட்ஜ் கதவை திறப்பதை தவிர்க்க வேண்டும். அப்படி திறந்தாலும் உடனே அதை மூடி விட வேண்டும். அதே போல உங்கள் கணினி, வைஃபை ரவுட்டர்கள் போன்ற உபகரணங்களை இரவு நேரத்தில் அல்லது நீங்கள் வெளியில் இருக்கும்போது ஆஃப் செய்துவிட்டு செல்ல வேண்டும்.
வீட்டில் பொதுவாக பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டருக்கு பதிலாக நீங்கள் சோலார் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தலாம். அதன் மூலமாக மழை மற்றும் குளிர் காலங்களில் உங்களது மின்சார கட்டணத்தை குறைக்க முடியும். வாஷிங் மெஷினை அதிக துணிகளுடன் இயக்குங்கள். குறைவான துணிகளுடன் இயக்கினால் அதிக துணிகளுடன் இயக்கியதற்கான மின்சாரமே செலவாகும். ஐ.எஸ்.ஐ முத்திரை பதிக்கப்பட்ட தரமான மின் உபகரணங்கள் மின்சாரத்தை சேமிக்கும்.