உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின் போது, நதி நீரில் புனித நீராடுவதற்காக கோடிக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து வருகை தருகின்றனர், அந்த வகையில், மகா கும்பமேளா நிர்வாகத்தின் கூற்றுப்படி, ஜனவரி 13ஆம் தேதி முதல் நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 54.31 கோடியைத் தாண்டியுள்ளது. நீர் மாசுபாடு குறித்த கவலைகள் இருந்தபோதிலும், யாத்ரீகர்கள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் கூடுகிறார்கள்.
இந்நிலையில் தான், மகா கும்பமேளாவின் போது பிரயாக்ராஜின் பல்வேறு இடங்களில் உள்ள நதி நீரில் மல கோலிஃபார்ம் அளவுகள் அதிகளவில் இருப்பதால், குளிப்பதற்கு தகுதியற்றதாக இருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு (NGT) அறிக்கை அளித்துள்ளது.
கோலிஃபார்ம் என்பது மனிதர்கள் உட்பட விலங்குகளின் செரிமானப் பாதையில் உருவாகும் பாக்டீரியாக்கள் ஆகும். தண்ணீரில் கழிவுநீர் மாசுபடுவதைக் குறிக்கும் ஒரு குறிகாட்டியாக மலக் கோலிஃபார்ம் உள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தரநிலைகள் 100 மில்லி தண்ணீருக்கு அதிகபட்சமாக 2,500 யூனிட் மலக் கோலிஃபார்மை அனுமதிக்கின்றன. ஆனால், நதி நீரில் கண்காணிக்கப்பட்ட அளவுகள் பல இடங்களில் இந்த வரம்பை மீறியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பதிலளித்துள்ள உத்தப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான் என்றும் ஏன் குடிக்கவும் ஏற்றதுதான் என்றும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற அறிக்கைகள், கும்பமேளாவை அவமதிக்கும் பிரச்சாரம் என்றும் இதை சிலர் அரசியலாக்குவதாகவும் தெரிவித்துள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், “பிரயாக்ராஜ் ஆற்று நீர எடுத்து மக்கள் மத்தியில் குடிக்க வேண்டுமென யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது அமைச்சரவைக்குச் சவால் விடுகிறேன்” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.