‘live-in’ relationship: திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும், ‘லிவ் – இன்’ உறவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற விதியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ‘உறவை பதிவது எவ்வாறு அந்தரங்கத்தில் நுழைவதாகும்’ என மனுதாரரிடம் உத்தராகண்ட் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
உத்தராகண்டில் சமீபத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி திருமணம், விவாகரத்து, சொத்து உள்ளிட்டவற்றில் அனைத்து மதங்களுக்கும் இனி பொதுவான சட்டம் அமலில் இருக்கும். இந்த சட்டத்தில் திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் ‘லிவ்- இன்’ முறை அங்கீகரிக்கப்படுகிறது. ஆனால், அவர்களும் திருமண தம்பதியர் போல, தங்கள் உறவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். லிவ்–இன் முறையில், 18 வயதுக்கு குறைந்தவர்கள் பதிவு செய்ய முடியாது. 21 வயதுக்கு கீழே உள்ளவர்கள் என்றால் அவர்களுடைய பெற்றோருக்கு பதிவாளர் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இந்த விதிகள் லிவ்-இன் முறையில் வாழ்பவர்களின் அந்தரங்கத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என கூறி இதற்கு எதிராக உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் நரேந்தர் மற்றும் அலோக் மெஹ்ரா ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர்களிடம், ‘நீங்கள் காட்டில் உள்ள குகையில் வசிக்கவில்லை. சமூகத்தில் வாழ்கிறீர்கள். அண்டை வீட்டார் முதல் சமூகத்தினர் வரை உங்கள் உறவு தெரியவரும். மேலும் நீங்கள் திருமணம் செய்யாமல் துணிச்சலுடன் ஒன்றாக வாழ்கிறீர்கள். பிறகு எப்படி லிவ்-இன் உறவைப் பதிவு செய்வது உங்கள் அந்தரங்கத்திற்குள் நுழைவதாகும்?’ என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அத்துடன் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டது.