போடாத சாலைக்கு, சாலை போடப்பட்டதாகக் கிடைத்த பதிலால் அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர் கொரட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (54). இவர், அதே பகுதியில் உள்ள சாலை காணாமல் போனதாக வினோத புகார் ஒன்றை கொரட்டூர் போலீசில் கொடுத்துள்ளார். அந்த புகாரில், அம்பத்தூர் 7-வது மண்டலத்திற்கு உட்பட்ட கொரட்டூரில் உள்ள என்.ஆர்.எஸ் சாலை, சீனிவாசபுரம் மற்றும் கண்டிகை சாலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டிருந்ததாகவும், அம்பத்தூர் செயற்பொறியாளர் சார்பில் சாலைகள் கடந்த பிப்ரவரி மாதம் போடப்பட்டதாகப் பதில் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
போடாத சாலையைப் போட்டதாகக் கூறி மாநகராட்சி தரப்பில் வந்த பதிலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குமார் இதுகுறித்து கொரட்டூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும், அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், இந்த புகாரை மாநகராட்சியில் கொடுக்குமாறு போலீசார் அவரை அனுப்பி வைத்தனர்.