இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), தனது ஸ்பேடெக்ஸ் (SpaDex) பரிசோதனையின் ஒரு பகுதியாக, இன்று இரண்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விடுவித்துள்ளது. இது சந்திரயான்-4 மற்றும் பல எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு அடித்தளம் அமைத்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. அந்த பதிவில் “ SDX-2 நீட்டிப்புடன் தொடங்கி, திட்டமிட்டபடி கேப்சர் லீவர் 3 வெளியிடப்பட்டது, SDX-2 இல் உள்ள கேப்சர் லீவர் விடுவிக்கப்பட்டது. இரண்டு செயற்கைக்கோள்களுக்கும் விடுவிக்கும் கட்டளை வழங்கப்பட்டது.” என்று தெரிவித்துள்ளது..
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ இஸ்ரோ குழுவுக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு இந்தியருக்கும் மகிழ்ச்சி! ஸ்பேடெக்ஸ் செயற்கைக்கோள்கள் நம்பமுடியாத வகையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளார்..
மேலும் “பாரதிய ஆந்த்ரிக்ஷா நிலையம், சந்திரயான் 4 & ககன்யான் உள்ளிட்ட லட்சிய எதிர்கால பயணங்களை சுமூகமாக நடத்துவதற்கு இது வழி வகுக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான ஆதரவு உற்சாகத்தை அதிகரிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
விண்வெளி டாக்கிங் பரிசோதனை பணி டிசம்பர் 30, 2024 அன்று சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. சேஸர் மற்றும் டார்கெட் என்றும் அழைக்கப்படும் இரண்டு செயற்கைக்கோள்கள் SDX01 மற்றும் SDX02 ஆகியவை ஜனவரி 16 அன்று விடுவிக்கும் பணி செய்யப்பட்டன.
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு வெற்றிகரமான விண்வெளி டாக்கிங் சாதனையை அடைந்த 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது..
முன்னதாக இஸ்ரோ தலைவர் வி நாராயணன் மற்ற விண்வெளி டாக்கிங் சோதனைகள் மார்ச் 15 முதல் நடத்தப்படும் என்று கூறியிருந்தார். நாங்கள் ஒரு திட்டத்தை வகுத்துள்ளோம், மார்ச் 15 முதல் உண்மையான சோதனைகளைத் தொடங்குவோம். தற்போது, ஒருங்கிணைந்த செயற்கைக்கோள் ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதையில் உள்ளது. எனவே, பல்வேறு சோதனைகளை நடத்த 2 மாதங்களுக்கு ஒரு முறை 10-15 நாட்கள் அவகாசம் கிடைக்கிறது,” என்று அவர் கூறினார்.
ஸ்பேடெக்ஸ் மிஷன் என்பது செலவு குறைந்த பணியாகும், இது PSLV ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இரண்டு சிறிய விண்கலங்களைப் பயன்படுத்தி விண்வெளி டாக்கிங்கை நிரூபிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு பொதுவான இலக்கை அடைய தேவையான பல ராக்கெட் ஏவுதல்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் இந்த தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.