கனமழையால் ஐடி நிறுவனங்களுக்கு ஏற்பட்ட ரூ.225 கோடி இழப்பு குறித்து விவாதிக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதியளித்துள்ளார்.
கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு, பெங்களூருவைச் சேர்ந்த ஐடி மற்றும் வங்கி நிறுவனங்களின் அமைப்பான அவுட்டர் ரிங் ரோடு கம்பெனிகள் சங்கம் (ஓஆர்ஆர்சிஏ) கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், கடுமையான மழை தண்ணீர் தேங்குவதால் நிறுவனங்களுக்கு ரூ.225 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் அந்த பகுதியில் உள்ள சாலைகளை சீரமைத்து வடிகால் வசதி செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிடப்பில் இருக்கும் மெட்ரோ பணியையும் விரைந்து முடித்துத்தருமாறும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

இதுதொடர்பாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அளித்துள்ள பதிலில், ”ஐடி நிறுவனங்கள் சந்தித்து வரும் ரூ.225 கோடி மதிப்பிலான இழப்பு குறித்து விவாதம் நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார். நாங்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை அழைத்து, தண்ணீர் தேங்குவதால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அவர்களிடம் பேசுவோம். மழையினால் ஏற்பட்ட இழப்பீடு மற்றும் பிற சேதங்கள் குறித்தும் விவாதிப்போம்” என்று பொம்மை கூறினார். பேச்சுவார்த்தைக்கு பின் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்குத் தேவையான உதவிகளையும் நிதியையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றார். பெங்களூருவில் இடைவிடாது கனமழை பெய்ததால் பெங்களூரின் கோரமங்களா உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.