மத்தியப் பிரதேசத்தில் இயற்கைக்கு மீறிய பாலியல் உறவு தப்பில்லை எனக் கூறி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றை தள்ளுபடி செய்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் மன்சூர் மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் மீது அவர் மனைவி போலீசில் புகார் ஒன்றை அளித்தார். 31 வயதான அப்பெண் ரூ.20 லட்சம் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை செய்ததாக தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய கணவர் இயற்கைக்கு மாறான வழியில் உடலுறவு கொண்டதால் தனக்கு தொற்றுநோய் ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார்.
மனைவி அளித்த புகாரின் பேரில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தின் இந்தூர் பெஞ்சில் நடைபெற்று வந்தது. வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என கணவர் குடும்பத்தினர் பதில் மனு தாக்கல் செய்தனர். மேலும், திருமண விஷயத்தில் தன் மீது நெகட்டிவ் ஆன எண்ணத்தை உருவாக்கவே இயற்கைக்கு மாறான பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக கணவர் தெரிவித்தார். திருமண வாழ்க்கையின் போது கணவன்-மனைவியுடன் உடலுறவு கொள்வது குற்றமாகாது எனவும் கணவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கானது நீதிபதி பிரேம் நாராயண் சிங் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களுடன் கணவர் உடலுறவில் ஈடுபடுவது வன்கொடுமை ஆகாது. இதில் அப்பெண்ணின் சம்மதம் முக்கியமற்றது எனவும் திடுக்கிடும் கருத்துகளை தெரிவித்தார். எனவே, முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டது போல ஐபிசி சட்டப்பிரிவு 377 (இயற்கைக்கு மாறான செயல்), பிரிவு 294 (துஷ்பிரயோகம்) மற்றும் பிரிவு 506 (அச்சுறுத்தல்) ஆகியவற்றின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்வதாக குறிப்பிட்டார்.
அதேசமயம் பிரிவு 498-ஏ (ஒரு பெண்ணை அவரது கணவர் அல்லது அவரது உறவினரால் கொடுமைப்படுத்துதல்) ரத்து செய்ய மறுத்து, அதனடிப்படையில் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தார். இந்த தீர்ப்பு அம்மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகவும் மாறி, பலரும் தங்களுடைய எதிர்ப்பை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Read More : குடிபோதையில் கத்தியுடன் உலா வந்த ரவுடி..!! மடக்கி பிடித்த போலீஸ்..!! விசாரணையில் அதிர்ச்சி..!!