யுபிஐ வசதியைப் பயன்படுத்தி பணம் செலுத்துபவர்களுக்கு வசதியாக ஹெச்.டி.எஃப்சி. மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் அனைவரது கையிலும் ஆண்ட்ராய்டு போன்கள் இருக்கிறது. இதற்கேற்றவாறு அனைத்து துறைகளும் ஸ்மார்ட் ஆன வசதிகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அந்த வகையில், பல வங்கிக் கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையாளக்கூடிய UPI (Unified Payments Interface) வசதியும் உள்ளது.
ஆரம்பத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லாத நிலையில், ஆண்ட்ராய்டு போன்கள் வந்துவிட்ட பிறகு UPI வசதி என்பது அசுர வளர்ச்சி அடைந்துவிட்டது. அதற்கேற்ப Gpay, Paytm, PhonePe போன்ற பல்வேறு செயலிகளும் நடைபாதை வியாபாரம் முதல் பெரிய பெரிய வணிகம் வரை யுபிஐ பயன்பாட்டை அதிகரித்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் பயனாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கவும் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அப்படியான ஒரு திட்டத்தை தான் ஹெச்.டி.எஃப்சி. மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ளன.
அப்படி என்ன ஸ்பெஷல்?
அதன்படி, இனி உங்கள் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லையென்றாலும் நீங்கள் விரும்பும் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். ரிசர்வ் வங்கி UPI பயனர்களுக்கு Credit Line Facility எனப்படும் கடன் வழங்கும் வசதியை வழங்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த வசதி வாடிக்கையாளரின் அனுமதியுடன் செயல்படுத்தப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட கடன் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்ப செலுத்தும் வகையில் UPI Now Pay Later என்ற திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி. வங்கியில் இந்த வசதியை செயல்படுத்தும் போது முதல்முறை ரூ. 149 கட்டணம் செலுத்த வேண்டும். அதில், வங்கி உங்களுக்காக ஒரு கணக்கைத் திறந்து, உங்கள் டெபிட் கார்டை அதனுடன் இணைக்கும். பிறகு, இந்த “Pay Later” கணக்கை உங்களுக்கு விருப்பமான யுபிஐ செயலியுடன் இணைக்க வேண்டும்.
ஹெச்.டி.எஃப்.சி. மற்றும் ஐசிஐசிஐ வங்கி இரண்டும் ஒரு பயனருக்கு அவர்களின் தகுதியின் அடிப்படையில் அதிகபட்சம் ரூ.50,000 வரை கடன் வழங்குகிறது. இந்த கடன் வரம்பு வருமானம், செலவு முறைகள் மற்றும் முந்தைய கடன் செயல்முறை ஆகியவற்றை பொறுத்து ஒரு வாடிக்கையாளருக்கு மற்றொரு வாடிக்கையாளருக்கு வேறுபடலாம்.