மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு பணியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் இணைத்தவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக இந்த மாதம் 31ஆம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. மின் நுகர்வோர்கள் மின் வாரிய இணையதளத்தை பயன்படுத்தியும் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் 1.96 கோடி பேர் தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இன்னும் சுமார் 70 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி இருக்கிறது. இந்நிலையில், ஆதார் எண் இணைத்தவர்களில் சிலரது தகவல்கள் அழிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டதும், பலரும் ஆன்லைன் மூலமாக ஆதார் எண்ணை இணைக்க தொடங்கினர். கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ஆயிரக்கணக்கானவர்கள் ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைத்து இருந்தனர். இந்த இடைப்பட்ட தேதிகளில் ஆதாரை இணைத்து இருந்தவர்களின் தகவல்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அழிந்து விட்டதாக கூறப்படுகிறது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பிறகு அதை மின் வாரிய தகவல் சேமிப்புடன் இணைக்கும் போது மின் நுகர்வோர்களின் தகவல்கள் சேமிக்கப்படாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. இதை மின் வாரிய அதிகாரிகள் சிலரும் உறுதிபடுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது முகவரியில் குறிப்பிடப்பட்ட சில தகவல்கள் சேமிப்பாகவில்லை. அவர்களுக்கு ஆதார் எண் இணைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்திருந்தாலும் தகவல்கள் சர்வரில் இடம்பெறாமல் போய்விட்டது” என்றார். இதையடுத்து, விடுபட்ட தகவல்களை மீண்டும் இணைப்பதற்கு மின்வாரிய ஊழியர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டும், அதை சரிசெய்ய முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையில் விடுபட்டோர்களின் ஆதார் எண்ணை மீண்டும் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விடுபட்ட ஆதார் இணைப்பு எண்களுக்கு உரியவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. அத்தகைய மின் நுகர்வோர்கள் மீண்டும் மின் அலுவலகத்துக்கு நேரடியாக சென்று ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 2-வது தடவை ஆதார் எண்ணை இணைக்கும் போது ஓ.டி.பி. எதுவும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் சிலர் கூறுகையில், “மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை அலுவலகங்களுக்கு நேரில் வந்து இணைத்தவர்களுக்கு எந்த சிக்கலும் வரவில்லை. ஆனால், ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்குத்தான் இத்தகைய சிக்கல்கள் உருவாகி உள்ளது. மின் இணைப்பு ஒருவரது பெயரிலும், ஆதார் எண்ணை இணைத்து வருபவர் வேறொரு பெயரிலும் இருக்கும் பட்சத்தில் அதை மின் வாரிய செயலி ஏற்காது. சிலர் தங்களது பெயரை முகவரியில் சுருக்கி எழுதி இருப்பார்கள். ஆனால் மின் இணைப்பில் முழு பெயர் இருக்கும். இத்தகைய நுகர்வோர் பெயர் குழப்பம் காரணமாகவும் குளறுபடி ஏற்பட்டு வருகிறது” என்றனர்.
குறிப்பு: (மின் வாரியத்தில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தால், தங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவ்வாறு சந்தேகம் இருந்தால், மின் இணைப்பு எண்ணுடன் மீண்டும் ஆதாரை இணைத்து பார்த்தால் அது இணைக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை கண்டுபிடிக்கலாம்.)