அடுத்த 6 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆந்திர கடலோரப் பகுதி அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை (நவ.16) வலுவடைய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு நடவடிக்கை:
திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 13 மாவட்டங்களின் நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநில மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசிகளுடனும், கூடுதலான அலுவலர்களுடனும் இயங்கி வருகின்றன. மேலும் பொதுமக்கள், வாட்ஸ் அப் எண்.94458 69848 மூலம் புகார்களை பதிவு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.