நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகிய நிலையில், அவர் ‘Invisible’ ஆக இருந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. Visible ஆக வந்து எவ்வளவு காலம் ஆகிறது என தெரியவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கிய அன்றே தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து தற்போது வரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் தவெகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி தவெக முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. மாநாட்டில், அரசியல் மற்றும் கொள்கை எதிரிகள் குறித்து விஜய் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து, கட்சியில் நிர்வாகிகள் நியமனம் தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கட்சி தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. 2-ம் ஆண்டு தொடக்க விழா இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. மேலும் தவெக கொள்கை தலைவர்களின் சிலைகளை நடிகர் விஜய் திறந்து வைத்தார்.
நடிகர் விஜயின் அரசியல் குறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்; நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் ஆகிய நிலையில், அவர் ‘Invisible’ ஆக இருந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. Visible ஆக வந்து எவ்வளவு காலம் ஆகிறது என தெரியவில்லை. அவர் களத்துக்கு இறங்கி வந்து மக்களுக்காக பணியாற்றினால் மகிழ்ச்சி. ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உண்டு அது போல விஜய்க்கு தொலைநோக்கில் தான் அரசியல் செய்ய வேண்டும், Work From Home மற்றும் இணையதளத்தில் தான் பணி செய்ய வேண்டும் களத்தில் இறங்க வேண்டாம் என நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது என தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.