தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தொடர்ந்து பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் விபத்து மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ₹1 கோடி தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகை பெறுவார்கள். தகுதியான வயதை எட்டிய அரசு ஊழியர்களின் மகள்களின் திருமணச் செலவுகளுக்காக வங்கிகள் தலா ₹5 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை வழங்கும். விபத்தால் இறக்கும் அரசு ஊழியர்களின் மகள்கள் பள்ளி முடித்து, மேலும் படிப்பைத் தொடர்ந்தால், அவர்களின் உயர்கல்விக்காக ₹10 லட்சம் வரை வங்கிகள் மூலம் வழங்கப்படும்.
அரசு ஊழியர் ஒருவர் பணியின் போது இயற்கை மரணமடைந்தால், வங்கிகள் அவரது குடும்பத்திற்கு ₹10 லட்சம் கால ஆயுள் காப்பீட்டுத் தொகையை வழங்கும். நிதிச் சுமைகளைக் குறைக்க தனிநபர் கடன்கள், வீட்டுக் கடன்கள் மற்றும் கல்விக் கடன்களுக்கான குறைந்த வட்டி விகிதங்கள் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
அரசு அலுவலர்களுக்கு இந்தக் காப்பீடு உள்ளிட்ட சேவைகளை எதிர்வரும் 2025-26 ஆம் நிதியாண்டு முதல் வழங்கிட முன்வரும் வங்கிகளுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதுடன், குறித்த காலத்திற்குள் இப்பயன்கள் அரசு அலுவலரின் குடும்பங்களுக்குக் கிடைத்திடுவதை தமிழ்நாடு அரசின் கருவூலத் துறை ஒருங்கிணைக்கும்.
ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் வெவ்வேறு அரசுத் துறைகளிலுள்ள காலிப் பணியிடங்களுக்காக இதுவரை 57,016 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 21866 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 78,882 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 40,000 பணியிடங்களை வரும் நிதி ஆண்டிலேயே நிரப்பும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.