பகல்காமில் 26 பேரின் உயிரை பறித்த தீவிரவாதிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதிகள் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் காவல்துறை அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். ஆண்களிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய கடற்படை அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் இரவு ஸ்ரீநகர் சென்றார். தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சவுதி அரேபியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு நேற்று முன்தினம் இரவு அவசரமாக நாடு திரும்பினார். பிரதமர் மோடி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் உள்ளிட்ட ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
பஹல்காம் மலைப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தலைமறைவாக உள்ளனர். இப்பகுதியில் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பின் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 26 பேரின் உயிரை பறித்த தீவிரவாதிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதிகள் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் காவல்துறை அறிவித்துள்ளது.