ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யுமாறு இந்திய தேர்தல் ஆணையம் ஜார்க்கண்ட் ஆளுநருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று அம்மாநில ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.. இதுதொடர்பான பரிந்துரையை தேர்தல் ஆணையம் ஜார்கண்ட் மாநில ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது..
இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை குறித்து என்ன முடிவெடுப்பது என்பது ஆளுநரின் கையில் உள்ளது, ”என்று கூறினார்.
தனது முதலமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி கல் குவாரி சுரங்கங்களை குத்தகைக்கு பெற்று முறைகேட்டில் ஈடுபட்டு வருவதால், அவரை சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாநில எதிர்க்கட்சியான பாஜகவிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் பேரில் ஜார்கண்ட் கவர்னர் தேர்தல் ஆணையத்தின் கருத்தை கேட்டிருந்தார்.
இந்திய தேர்தல் ஆணையம் தனது பரிந்துரைகளை அனுப்பியுள்ளதாக ஜார்கண்ட அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை ஜார்கண்ட் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இது குறித்து ஆளுநர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது குறித்து ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவும் ஆவலுடன் காத்திருக்கின்றன