விஷ கசாயம் கலந்த ஜூஸ் கொடுத்து, காதலனை கொலை செய்த சம்பவத்தில் கைதான மாணவி, தனது காதலனை டேட்டிங் அழைத்துச்சென்று, ஜூஸில் காய்ச்சல் மாத்திரைகளை கலந்து கொடுத்து 10 முறைக்கு மேல் கொலை செய்ய முயன்றது அம்பலமாகி உள்ளது.
தமிழக – கேரளா எல்லையான பாறசாலை பகுதியைச் சார்ந்த கல்லூரி மாணவர் சரோன் ராஜை, வீட்டிற்கு அழைத்து கசாயத்திலும், ஜூஸிலும் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக, காதலி கிரீஷ்மா கைது செய்யப்பட்டார். கொலைக்கு உதவியதாக, கிரீஷ்மாவின் தாய் மற்றும் தாய் மாமாவும் கைதாகினர். இவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கேரளா குற்றப்பிரிவு போலீசார், தாயையும் மாமாவையும் 5 நாட்களும், கிரீஷ்மாவை 7 நாட்களும் காவலில் எடுத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிரீஷ்மாவும் சரோன் ராஜும் தாலி கட்டிக்கொண்ட திருவனந்தபுரம் அருகே உள்ள வெட்டுக்காடு பள்ளி மற்றும் வேலி கடற்கரை பகுதி போன்ற இடங்களில் நேரடியாக அழைத்துச்சென்று விசாரணை நடத்தப்பட்டது. குமரி மாவட்டத்தில் சரோன் ராஜ் படித்த கல்லூரி உட்பட ஜூஸ் சேலஞ்ச் நடத்திய குழித்துறை பழைய பாலம், திற்பரப்பு அருவி பகுதியில் உள்ள தனியார் விடுதியிலும் நேரடியாக அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது.

காதலனுடன் டேட்டிங் செல்லும் போதெல்லாம், தான் படிக்கும் கல்லூரிக்கு அருகில் உள்ள பெட்டிக்கடையில், இரு சிலைஸ் மேங்கோ ஜூஸ் வாங்கிக்கொள்ளும் கிரீஷ்மா, ஒரு பாட்டிலில் 10 க்கும் மேற்பட்ட காய்ச்சல் மாத்திரைகளை கலந்து வைத்துக்கொள்வார். தனிமையான இடத்துக்கு சென்றதும் இரு ஜூஸ் பாட்டில்களையும் எடுத்து வைத்து, ஜூஸ் சேலஞ்ச் வைப்பாரம். யார் முதலில் வேகமாக முழு ஜூசையும் குடித்து முடிக்கின்றனரோ, அவரே வெற்றியாளர் என்று கூறி காதலனுக்கு காய்ச்சல் மாத்திரை கலந்த ஜூஸை குடிக்க கொடுத்துள்ளார்.

திற்பரப்பு அருவி தொடங்கி, அவர்கள் தங்கிய விடுதிவரை, பல இடங்களுக்கு இரு ஜூஸ் பாட்டில்களை கொண்டு சென்று, சரோனை குடிக்கவைத்து கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால், சாரோன் அதனை குடித்தும் உயிர் தப்பியதால், தனது தாய்மாமன் மற்றும் தாயின் யோசனைப்படி, கசாயத்திலும், ஜூஸிலும் விஷம் கலந்து கொடுத்ததாக, போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாங்கோ ஜூஸில் விஷம் கலந்து கொடுத்தால், அதன் நிறம் மாறாது என்பதால், அதனை தேர்ந்தெடுத்ததாக கூறியதால், அந்த கடைக்கே அழைத்துச்சென்று ஜூஸை வாங்கி போலீசார் சோதித்து பார்த்தனர். இதற்கிடையே, இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.