சிக்கிம் மாநிலத்தின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் பெல்லிங் என்ற டவுனில் இருந்து சுமார் 34 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கேச்சியோபால்ரி ஏரி. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5,600 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த ஏரி உள்ளூர்வாசிகளால் ஷோ ஸோ ஷோ (Sho Dzo Sho) என்று அழைக்கப்படுகிறது. கேச்சியோபால்ரி ஏரி அமைந்திருக்கும் சூழலே நம் மனதுக்கு அமைதியை தருமாம். கரடுமுரடான மலைப்பாதைகள், அடர்ந்த காடுகளை கடந்து இந்த ஏரியை அடையும்போது நகரத்தின் இரைச்சல் முற்றிலுமாக அடங்கியிருக்கும்.
இங்கு வரும் மக்கள் சிலர், தங்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏரியின் முன் நின்று, நிறைவேற வேண்டிக்கொள்கின்றனர். நமது நீண்ட நாள் கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த ஏரியின் அருகில் நாம் புத்த துறவிகளையும் காணலாம். அமைதியான தியான நிலையிலோ, அல்லது உரக்க, எல்லோருக்கும் கேட்கும்விதத்திலோ இங்கு மக்கள் வேண்டுதல்கள் முன்வைக்கின்றனர்
.
இந்த ஏரியின் தண்ணீர் எவ்வளவு சுத்தமாக இருக்கும் என்றால், அதில் நமது பிம்பத்தை கண்ணாடியில் பார்ப்பதுபோல பார்க்க இயலும். இந்த ஏரி அமைந்திருக்கும் கேச்சியோபால்ரி தேசிய பூங்காவில் பல அரிய வகை உயிரனங்கள் தாவரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. கேச்சியோபால்ரி ஏரிக்கு ஆன்மீக முக்கியத்துவம் இருக்கிறது. குறிப்பாக புத்த மற்றும் இந்து மதத்தவர்களுடன் பெரிதும் ஒன்றி இருக்கிறது இந்த நீர்நிலை. புத்தமத குருவான குரு பத்மசாம்பவா என்பவருடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.
மற்றொரு புறம் இந்து மதத்தவர்கள் இது தாரா ஜெட்சுன் டோல்மா தாயின் அம்சமாக பார்க்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், கழுகு பார்வையில், தாரா ஜெட்சுன் டோல்மாவின் பாதச் சுவடு வடிவத்தில் காட்சியளிக்குமாம். சிலர் இதனை சிவபெருமானின் பாதச்சுவடு என்றும் கூறுகின்றனர். இந்த ஏரியின் அருகில் ஒரு குகை இருக்கிறது. இந்த குகையில் சிவபெருமான் தவம் செய்ததாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர். ஆண்டு தோறும் நாக பஞ்சமி தினத்தன்று இங்கு மக்கள் கூடி வேண்டுதல்கள் முன்வைக்கின்றனர். வெண்ணெய் நெய்விளக்குகள் ஏற்றி, ஏரியை சுற்றிலும் வண்ணமயமான கொடிகள் பறக்கவிட்டு திருவிழாபோல காட்சியளிக்கிறது இந்த தினம்.
இந்த ஏரியின் தண்ணீர் புனிதமானதாகவும், நோய்னொடிகளை தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டது எனவும் நம்பப்படுகிறது. மேலும், இந்த ஏரியின் இலைகள் மிதக்காது அல்லது மிதக்க அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியே தவறி ஒரிரு இலைகள் விழுந்தாலும், அங்கு சுற்றித்திரியும் பறவைகள் அவற்றினை அகற்றிவிடுகிறது. ஆண்டின் எந்த காலத்திலும் இந்த ஏரிக்கு சென்று வரலாம் என்றாலும், கோடை அல்லது இலையுதிர் காலத்தில் செல்வது சிறந்த அனுபவத்தை தருகிறது.