பண்ருட்டியில் கபடி விளையாட்டின்போது உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெரிய புறங்கணிமுருகன் கோவில் தெருவைச் சேர்ந்த கபடி அணி வீரர் விமல்ராஜ் நேற்றிரவு பண்ருட்டி அருகே மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விமல்ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, முத்தாண்டிக்குப்பம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், கபடி போட்டியில் பங்கேற்று உயிரிழந்த விமல்ராஜின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், விமல்ராஜ் விளையாடிக் கொண்டிருந்தபோது உயிரிழந்த செய்தி கேட்டு வருத்தமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.