தமிழ்நாடு அரசு கலைஞர் கனவு இல்லம் திட்டம் (Kalaignar Kanavu Illam Scheme) செயல்படுத்தப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீடு இல்லாதவர்களுக்கு, நிரந்தரமாக வீடு கட்டித்தரும் திட்டத்தினை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரால், கடந்த 1975ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2010ம் ஆண்டு குடிசை இல்லா மாநிலம் என்ற இலக்கை எட்டும் வகையில், ‘கலைஞரின் வீடு வழங்கும் திட்டம்’ புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, ஊரகப்பகுதிகளை குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
அந்தவகையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கிராமப்பகுதிகளில் கிட்டத்தட்ட 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் வகையில் வரும் 2030ம் ஆண்டிற்குள் தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக 3500 கோடி ரூபாய் செலவில் 1 லட்சம் கான்கிரீன்ட் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது. இதற்கான நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரு வீட்டிற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அரசு கொடுக்கும்.
யாருக்கெல்லாம் கிடைக்கும்? இந்த பணம் மொத்தம் 4 பிரிவுகளாக பயனாளிகளின் வங்கி கணக்குக்கே நேரடியாக அரசு அனுப்பி வைக்கும். சொந்தமாக பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட தகுதியானவர்கள். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டுவதற்கு குறைந்தபட்சம் 360 சதுர அடி இடம் நிலம் இருக்க வேண்டும். அதில் 300 சதுர அடி கான்கீரிட் கட்டிடம் கட்ட வேண்டும். புதிதாக கட்டப்படும் வீடுகள் அனைத்தும் சிமெண்ட் மூலம் மட்டுமே கட்ட வேண்டும்.
இந்த வீட்டின் சுவர் மண்சுவர் மற்றும் மண் சாந்து மூலம் கட்டப்படக்கூடாது. புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டிருப்பவர்கள் இதில் வீடு கட்ட முடியாது. சொந்தமாக கான்கிரீட் வீடு இருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பணம் பெற முடியாது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயன்பெற குடிசை வீடுகளில் வாழ்பவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்குத்தான் ரூ.3.5 லட்சம் பணம் வீடு கட்ட கிடைக்கும்.
குடிசையில் ஒருபகுதி கான்கீரிட், ஓடு, ஆஸ்பெட்டாஸ் சீட்டு இருந்தாலும் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் படி வீடு கட்ட கட்டுமான பொருட்களுக்கான சிமெண்ட் மற்றும் கம்பி வழங்கப்படும். ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை நிதியாகவும், மீதம் 40 ஆயிரத்திற்கு கட்டுமான பொருட்களாகவும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Read more ; அதிர்ச்சி!. குளிர்காய தீமூட்டிய சிறுமிகள்!. நச்சுப்புகையை சுவாசித்த 3 பேர் பலியான சோகம்!