கலைஞர் கனவு இல்லம்” திட்ட பயனாளர்களை தேர்வு செய்யும் பணியை வரும் 25ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பெரும் கனவுகளில் ஒன்று சொந்தமான ஒரு கான்கீரீட் வீடு கட்டுவது. குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம். கடந்த பிப்ரவரி 19ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம், ஊரக வளர்ச்சித்துறை இதற்கான அரசாணையை வெளியிட்டது. இந்த திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் பயனாளர்களை தேர்வு செய்யும் பணியை வரும் 25ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க உள்ளது தமிழ்நாடு அரசு. பயனாளர்களை தேர்வு செய்யும் பணியை வரும் 25ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு. இப்பட்டியலை வரும் 30ம் தேதி நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும். தொடர்ந்து ஜூலை 10- ம் தேதிக்குள் வீடு கட்டும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் இத்திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.