கலாஷேத்ரா நடன பள்ளி பாலியல் புகார் விவகாரத்தில் உதவி ஆசிரியர் ஹரி பத்மனிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்..
சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் 200க்கும் அதிகமான மாணவிகள் நடனம் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் நடனம் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு வழங்குவதாக அந்த கல்லூரியின் முன்னாள் இயக்குனர் லீலா சாம்சன் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதை தொடர்ந்து அந்த கல்லூரியில் பாலியல் தொந்தரவு வழங்கிய பேராசிரியர் மீது எழுந்திருக்கின்ற பாலியல் புகார் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா அந்த கல்லூரியின் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.
இந்த சூழலில் கடந்த 10 ஆண்டுகளாக பேராசிரியகள் பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து கலாஷேத்ராவில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.. விடுதிகளை விட்டு மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.. இதனிடையே இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்….
இந்நிலையில் கலாஷேத்ரா பாலியல் கொடுமை தொடர்பாக கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. இந்த உதவி ஆசிரியர் ஹரி பத்மனிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்..