கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாகப் பொய்யான தகவல்களைப் பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்களை முடக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி போராட்டம் நடந்த நிலையில், அது திடீரென வன்முறையாக வெடித்தது. இதில், தனியார் பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. பள்ளி பேருந்துகள், மாணவர்களின் சான்றிதழ்கள் என அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீவைத்து கொளுத்தினர். இந்த கலவரத்தைத் தொடர்ந்து மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி காவல்துறை இயக்குநர் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள டிஐஜி பிரவீன்குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதில் ராதாகிருஷ்ணன், கிங்கஷ்ளின், திருமால், முத்து மாணிக்கம், சந்திரமௌலி உள்ளிட்ட 5 உயர் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அங்கு நடைபெற்ற வன்முறை தொடர்பான விசாரணையைத் தொடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாகப் பொய்யான தகவல்களைப் பரப்பும் வகையில் வீடியோ காட்சிகளை வெளியிட்ட யூடியூப் சேனல்களை முடக்கக் கூறியும், கலவரத்தைத் தூண்டும் வகையில் பதிவிட்ட வீடியோ பதிவுகளை நீக்கக் கூறியும், டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.