கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடல் மறுஉடற்கூராய்விற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக உயர்நீதிமன்றம் அமைத்துள்ள மருத்துவ குழு மருத்துவமனைக்கு வந்துள்ளது. ஆனால், மாணவியின் பெற்றோர் உள்ளிட்ட யாரும் அங்கு வரவில்லை. தங்கள் தரப்பு மருத்துவரையும் குழுவில் இடம்பெற செய்ய வேண்டும் என்று அவர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.
இதனால் உடற்கூராய்வு இன்று நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பம் நிலவுகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க மருத்துவமனை முன்பு வஜ்ரா வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் பகுதிகளில் 6 வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட வருவாய்த்துறை குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாணவி மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிபிசிஐடி எஸ்.பி. ஜியாவுல் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கல்லூரி முதல்வர் உள்ளிட்டோரிடம் விவரங்களை கேட்டு பெற்றனர். அதன் தொடர்ச்சியாக சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு சென்றும் அவர்கள் ஆய்வு நடத்தவுள்ளனர். இதற்கிடையே, மாணவி மரணம் அடைந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.