தீபாவளிக்கு மகளை அழைத்து வர சென்ற தாய் விபத்தில் பலியாகியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபேட்டையைச் சேர்ந்தவர் நடராஜன்(45). இவரது மனைவி ராதா(40), இவர்கள் இருவரும், ஊராட்சி துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர்.
அவர்களது மகள், நாமக்கல் தனியார் பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகின்ற நிலையில் தனது மகளை தீபாவளிக்கு அழைத்து வர காரில் சென்றபோது, கார் கவிழ்ந்தது. அந்த விபத்தில், பெண்ணின் தாயான அரசு துவக்கப்பள்ளி பெண் ஆசிரியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு , தங்களது மகளை அழைத்து செல்வதற்கு கணவன், மனைவி இருவரும், நேற்று தங்களது சைலோ காரில் வந்திருந்தனர். பின்னர், தன் மகளை அழைத்துக் கொண்டு, ஊர் திரும்பினர். காரை, நடராஜன் ஓட்டி வந்த போது, நேற்று அதிகாலை 3:30 மணிக்கு, நாமக்கல் முதலைப்பட்டி புறவழிச்சாலை அருகே சென்று கொண்டிருந்த போது , நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது.
அதன் மீது மோதாமல் இருக்கவே நடராஜன், திடீரென பிரேக் போட்டுள்ளார், கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக உருண்டோடி கவிழ்ந்தது. இதில், காரில் இருந்து துாக்கி வீசப்பட்டார் ராதா. இதனால் படுகாயமடைந்த ராதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வெகு நாட்கள் கழித்து தன் தாயுடன் விடுமுறை கழிக்க நினைத்த மகள் கண்முன், தன் தாய் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.